சில நாட்களுக்கு முன் senior citizen home என்று அழைக்கப்படும் ஒரு விடுதியில் தங்கியிருக்கின்ற எனது நண்பரையும் அவரது துணைவியாரையும் சென்று பார்த்து வரலாம் என்று முடிவு செய்தேன். அவர் சில நாட்களுக்கு முன் மருத்துவ சிகிச்சை முடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். மருத்துவ மனையில் இருக்கும் வரை நானும் அந்த மருத்துவ மனையில் பனி புரியு ம் எனது மருமகளும் அவரைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டோம் எனினும் வீட்டில் சென்று பார்க்கவில்லை என்ற குறை அவருக்கு இருந்து கொண்டே இருந்தது. சென்னை நகரின் மையப் பகுதியில் வசதியான அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர் குடியிருந்த போதும், திடீரென மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்ததும், அவரது இரண்டு குழந்தைகளும் வெளிநாட்டில் settle ஆகிவிட்டனரென்பதும் அவரைப் பயம் கொள்ளச் செய்திருந்தது.போலும்.
சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்ந்துகொள்ள அவர் வந்தபோது பிள்ளைகளுக்கு தொல்லை கொடுக்காமல் அருகிலிருக்கும் நண்பர்கள் உதவியுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கருதினார். என்னுடன் அவர் கலந்தாலோசித்தபோது, அருகில் பிள்ளைகள் இருக்கவேண்டும் என்று ஆலோசனை கூறினேன். அவர் உங்களைப் போன்ற நண்பர்களே போதும் என்று சொல்லிவிட்டார்.
ஆனால் மருத்துவ மனையிலோ அவரின் நெருங்கிய உறவினர் அனுமதி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வது இயலாதென்றும், வயது சென்ற அவரது மனைவியாரைக் கவனிக்கவே ஒருவர் தேவை என்பதால் அவரது பிள்ளைகள் ஒருவரை discharge ஆகும் வரை உடனிருந்து கவனித்துக்கொள்ளச் செய்யுமாறும் தெரிவித்தனர். இந்தத் தகவல் கிடைத்து வந்த மகன் சரியாக அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய நாள் வந்து சேர்ந்தார்; ஒருவாரம் கழித்து மருத்துவமனையிலிருந்து discharge ஆகக் கூடிய தேதிக்கு அடுத்த நாள் return ticket புக் செய்துகொண்டு வந்திருந்தார்.
இத்தகைய நிலை என் நண்பரது உள்ளத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ தெரியவில்லை; வந்திருந்த மகனிடம் இது போன்ற நிலை மீண்டும் ஏற்படாத வண்ணம் எனக்கும் உன் அம்மாவுக்கும் போதிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் போ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். அவரது மகள் இன்று வரை வரவேயில்லை என்பது கூடுதல் தகவல். அந்த மகளின் வீடு அருகில் இருக்கவேண்டும் என்பதற்காகவே தன் ஓய்வூதியப் பலன்களைஎல்லாம் திரட்டி, அதற்கு மேல் சொந்த ஊரிலிருந்த சொத்துக்களைஎல்லாம் விற்று தனக்கும் தன் மகளுக்கும் என்று இரண்டு வீடுகளை வாங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இத்தகைய நெருக்கடிக்குள்ளான மகனும் மகளும் கலந்து பேசி ஒரு மூத்த குடிமக்கள் வாழ்விடத்தில் ஒரு flat வாங்கி அதில் குடியேறி இருக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டனர்.
அங்கு சென்று விட்ட அந்த நண்பர் என்னிடம் தொலை பேசியில் பேசும் போதெல்லாம் அங்கு உள்ள வசதிகளைப் பட்டியலிட்டு அவசியம் நானும் என் மனைவியும் வந்து அந்த கண் கொள்ளாக் காட்சியை காணவேண்டுமென்று தொடர்ந்து வேண்டி வந்தார். அதனை ஏற்று, கொஞ்சம் தொலைவு அதிகம் என்றாலும் முயன்று சென்று அவர்களைப் பார்த்து வருவதென்று முடிவு செய்து ஒரு நாளைக் குறிப்பிட்டு அன்று வந்தால் அவர்கள் வெளியில் எங்கும் சென்று விடுவார்களா, வேறு ஏதேனும் வசதிக் குறைவு உண்டா..? என்று விசாரித்தேன். ஒரு தடையும் இல்லை, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் .வரும் அன்று காலை ஏழு மணிக்குள் எனக்குத் தெரிவித்து விட்டு வாருங்கள் என்று வேண்டினார்.
அன்றிலிருந்து நான் புறப்பட்டு செல்லும் நாள் வரை தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து, வருவதற்கான பாதையைக் குறித்தும் எந்த நேரம் வந்தால் போக்குவரத்து குறைவாயிருக்கும் என்றும் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்தார். அந்த ஆர்வம், எங்களின் வருகையை அவர் எவ்வளவு எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிவித்தது. நாங்கள் செல்வதற்கு முதல் நாள் எங்கள் பக்கத்து வீட்டு நண்பர் இதைக் கேள்விப் பட்டு, மூத்தக் குடி மக்கள் இல்லம் எப்படியிருக்குமென்று நானும் பார்க்க வேண்டும், நானும் உடன் வரவா என்றார். இதை நான் என் நண்பருக்குச் சொல்லவும் மிகவும் ஆர்வமாக, கண்டிப்பாக அவரையும் குடும்பத்தோடு அழைத்து வாருங்கள் என்று வேண்டிக் கொண்டார். அன்று இரவே திரும்பவும் அழைத்து நாளை காலை 10 மணிக்குப் புறப்பட்டு வந்து விடுங்கள், உங்கள் நால்வருக்கும் மதிய உணவு எங்களோடுதான்,இதை மறுக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டார்.
இதோ புறப்பட்டுவிட்டோம்; எப்படியும் சாப்பாடு மதியம் ஒரு மணிக்குத் தானே, சீக்கிரம் போய் போரடிக்குமே என்று நாங்கள் வழியிலிருக்கும் கோவில்களுக்குச் சென்று விட்டு போகலாம் என்று கோவில் ஒன்றில் இறங்கினோம். அதற்குள் நான்குமுறை அவரது phone ; ஏன் இன்னும் வரவில்லை, கட்டாயம் வந்து விடுவீர்கள்தானே.. என்று. தொடர்ந்த இந்த ஆர்வம் எனக்குள் ஓர் கழிவிரக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. பல நாட்களாக நண்பர் உறவினர் யாரும் அவரகளைப் பார்க்கச் செல்வதில்லை போலும் என்ற உண்மை அப்போதுதான் உறைக்கத் தொடங்கியது.
மீண்டும் தொடர்ந்து விசாரித்துக் கொண்டு ஒரு காட்டுக்குள் கட்டப்பட்டிருந்த அந்தக் concrete jungle ஐ கண்டுபிடித்தோம். மிகத் தொலைவிலிருந்தே அந்தக் கட்டிடத்தைப் பார்த்தபோது..அந்தக் கட்டிடத் தொகுப்பின் வாயிலில், எரிக்கும் வெயிலில் வயதான ஒருவர் நின்று தீவிரமாகக் கையை வீசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அதற்குள் phone call. அவர்தான். அந்தக் கார் உங்களதுதானே.? வாயிலில் நான் நிற்கிறேனே பார்த்து விட்டீர்களா..? என்று ஆர்வமாகக் கேட்டார். ஆமா சார், பாத்துட்டேன். நீங்க உள்ளே போங்க வந்திடறேன் என்றேன். நீங்க வாங்க சார்..நான் நிற்கிறேன் என்றார்.
அருகில் சென்று பார்த்தபோது வாயடைத்துப் போனேன். அரசுப் பணியில் மிக உயர்ந்த நிலை அடைந்து ஓய்வு பெற்றவர் அவர். அவரது ஆணையின் கீழ் பணியாற்றிய அதிகாரியாக இருந்தவன் நான். அத்தகையவர், இன்று அவரைப் பார்க்க நண்பர்கள் வருகிறார்கள் என்றவுடன் மகன்/மகள் கல்யாண வீட்டில் வரவேற்புக்கு நிற்பதைப் போல அபூர்வமாக உடையணிந்து வெளியில் நின்று வரவேற்றதும், என் காரை இடம் பார்த்து நிறுத்த உதவியதும், வாசலில் நின்ற காவலர்களை அழைத்து, என் friends ..என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள், என்று பெருமிதமாக அறிமுகப் படுத்தியதும் என் உள்ளத்தைத் தைத்தது.
என் பக்கத்து வீட்டு நண்பரும் அவரது துணைவியாரும் அவர்களுக்கு அறிமுகமில்லை என்றபோதும் அவர்களும் ஆர்வத்துடன் அவரைப் பார்க்க வந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. (அவர்கள் வந்தது வீட்டைப் பார்க்க...அவரது மகளும் கூட வெளிநாடு செல்லத் திட்டமிருன்தனர் போலும்).
வீட்டிற்குள் சென்றவுடன் அவரது துணைவியாரும் மிக்க மகிழ்ச்சியோடு எங்களை வரவேற்றார். எனது மனைவியும், பக்கத்து வீட்டு அம்மையாரும் வந்ததில் அந்த அம்மையாருக்கு மிக்க மகிழ்ச்சி..பல நாட்களுக்குப்பின் பெண்களின் துணை கிடைத்ததில். இருவருமாக அவர்களின் பக்கத்து, எதிர்வீட்டு நண்பர்களை அறிமுகப் படுத்தினர். 'இவர் ...பணியிலிருந்து ஒய்வு பெற்றவர். வயது 82. இவர் பையன் அமெரிக்காவிலிருக்கிறான். இப்போதான் வந்து போனான்..இனி அடுத்த வருஷம் வருவான். மகள் தாம்பரத்தில் இருக்கிறாள். மாசம் ஒருமுறை வருவாள்' அந்த முதியவர் முயன்று புன்னகைத்துத் தலையை மென்மையாக அசைத்தார். அவர் உட்கார்ந்திருந்தது சக்கர நாற்காலி. எதிர் வீட்டிற்கு அழைத்துச் சென்று 'இந்த அம்மாவுக்கு 90 வயது.. வந்த புதிதில் lift ஏறக் கூடப் பயப்படுவார்கள். இப்போ பரவாயில்லை. இவங்க மகள்...' என்று தொடங்குமுன்..அந்த அம்மையார்..'உச்..' என்ற ஒற்றை ஒலியில் தொடர்ந்து சொல்ல வேண்டாமென்று அடக்கினார். கையில் விலை உயர்ந்த designer walking stick . அதை எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்று அந்த அம்மையார் demo காட்டினார், மிகுந்த பெருமையாக. இப்படி நாங்கள் பார்த்த பலரும் உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய முடியாதவர்கள். எங்களைப் பார்த்து அவர்கள் சிந்திய புன்னகையில் மகிழ்ச்சியோ, அன்னியோன்னியமோ இல்லை..விரக்தியும் வெறுமையுமே இருந்தன. 'எங்க friends ' என்ற நண்பரின் அறிமுகத்தில் பெருமையும்..அதைக்கேட்ட அந்த inmates முகத்தில் பொறாமையும் இருந்தன.
இங்கே இருக்கிற எல்லோருடைய பிள்ளைகளும் வெளிநாட்டிலேதான் இருக்கிறார்களா என்ற என் கேள்விக்கு அவர் பலத்த சிரிப்பைப் பதிலாக்கினார். 'அப்படி இருக்கிறவங்க பரவாயில்லை. இங்கேயே அடையாறு, கிண்டி மாம்பலம், மயிலாப்பூரில் எல்லாம் இருக்கிற பிள்ளைகள் கூட இங்கே கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். ரெண்டு பேரும் வேலைக்குப் போகிறவர்கள் அல்லவா.'.' வாரம் ஒரு முறை வந்து பார்ப்பார்களோ' என்ற கேள்விக்கு ' இவுங்க phone பண்ணி வரச் சொன்னா வருவாங்க..ஆனா பெரும்பாலும் யாரும் அப்படி வரச் சொல்வதில்லை..எல்லோரும் நல்ல நிலையிலிருந்தவர்கள்.தன்மானம் மிக்கவர்கள் அல்லவா.மிகவும் தேவையானால் நிர்வாகத்தினர் தெரிவித்து வரச் சொல்வார்கள். ' என்றார். அந்தத் 'தேவை' என்ன என்பது சொல்லாமலே புரிந்தது.
திரும்ப அவரது portion இல் நுழைந்த நண்பர் தெரிவித்தார்.' இங்கே ஏறத்தாழ 250 குடியிருப்புக்கள் உள்ளன. இவற்றில் 50க்கும் குறைவானவற்றில் தான் கணவனும் மனைவியுமாகத் தங்கியிருக்கின்றனர். மிகுந்தவற்றில் ஆணோ , பெண்ணோ தனி ஆளாகத்தான் இருக்கின்றனர். எங்களுக்காவது பரவாயில்லை..பேசிக்கொள்ளவாவது அல்லது சண்டை போட்டுக்கொள்ளவாவது துணையிருக்கிறது. அதுவும் இல்லாதவர்கள் பாடு ரொம்பக் கஷ்டம். இதில் நான் கவனித்த விஷயம் என்னவென்றால்..கணவனை இழந்த பெண்கள் துணிச்சலாகத் தங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்பவர்களாக..தன்னம்பிக்கை உள்ளவர்களாகக் காண்கின்றனர்; ஆனால் மனைவியை இழந்த கணவர்கள் சோகமே உருவாய், செவிலியர் உதவியுடனேயே எந்தக் காரியமும் செய்து கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்' என்றார் .
அங்கு உள்ள 'வசதிகள்'குறித்து அவர் விளக்கினார்..'பெரும்பாலானவர்களுக்கு அவர்களுடைய பிள்ளைகள் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி கொடுத்து விடுகின்றனர். பராமரிப்பு, மின்சாரக்கட்டணம் போன்றவை தனி. செவிலியர் உதவி வேண்டுமென்றால் அதற்கு மணிக்கு இவ்வளவென்று கட்டணம், இதற்குள்ளேயே தனியார் மருத்துவமனையின் அறையொன்று இருக்கிறது, மருத்துவ பரிசோதனைக்குத் தனிக் கட்டணம், இங்கேயே உணவு விடுதி இருக்கிறது. ஒரு ஆளுக்கு மாதத்துக்கு 90 டோக்கன்.அதற்குரிய கட்டணத்தோடு. உங்கள் இடத்திற்கே உணவு வரவேண்டும் என்றால் தனிக் கட்டணம். காலை காபி நீங்கள் நடந்து சென்று குடிக்க ஒரு கட்டணம்..உங்கள் அறைக்குக் கொண்டு வர கூடுதல் கட்டணம். உங்களைப் பார்க்க விருந்தினர் வந்தால் காலை 7 மணிக்குள் தெரிவித்துக் கட்டணம் செலுத்தினால் சாப்பாடு உண்டு. இல்லையேல் சாப்பாட்டு நேரத்திற்கு வெளியே போக வேண்டியதுதான். அதனால்தான் நான்கு நாட்களாக உங்களை த் திரும்பத் திரும்பக் கேட்டு உறுதி செய்து கொண்டேன். எதற்கும் நாம் பணம் செலுத்த வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் மாசக் கடைசியில் பில் உங்களை இங்கே சேர்த்து விட்ட பிள்ளைக்குப் போய் விடும். அவர்கள் online payment செய்து விடலாம். ரொம்ப வசதியில்லையா..?
உடல் நலம் சரியில்லாமல் போனால் இங்குள்ள மருத்துவர் பார்த்து மருத்துவமனைக்குப் போய் விடுங்கள் என்று சொன்னால் இங்கேயே ஆம்புலன்ஸ் இருக்கிறது. மருத்துவமனை வாசலில் இறக்கிவிடுவார்கள். உங்கள் உறவினர் யாரேனும் வந்து அதன் பிறகு ஆக வேண்டியதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உறவினர் யாரும் இல்லையென்றால், உங்களை மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டுமானால், தனிக் கட்டணம். அதோடு அவர்கள் பொறுப்பு தீர்ந்தது..பிறகு அந்த மருத்துவ மனையாச்சு நீங்களாச்சு. வருஷத்துக்கு ஒருமுறை உங்கள் பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வந்து உங்களோடு தங்க விரும்பினால் அவர்களுக்கு இங்கே கெஸ்ட் ஹவுஸ் உண்டு..ஆனால் அது பெரும்பாலும் காலியாகவே இருக்கும். வருபவர்கள் வெளியே அறை போட்டு தங்கி விட்டு அவ்வப்போது வந்து போவார்கள். இங்கேயே தங்கியிருக்க விரும்புவதில்லை.
'இதையெல்லாம் விட ஒரு பெரிய சர்வீஸ் உண்டாம்'..என்று சொல்லி நிறுத்தினார். சிறிது இடைவெளிக்குப்பின் குரல் தழுதழுக்க தொடர்ந்தார் 'ஒருவேளை இங்கே இருப்பவர் இறந்து போய் ஈமக் கிரியை செய்ய பிள்ளைகள் வரமுடியவில்லை என்றால், அவர்களே உடலை எரித்து சாம்பலை ஒரு container ல் வைத்து விடுவார்கள். பிள்ளைகள் முடியும்போது வந்து அதை காசியிலோ ராமேச்வரத்திலோ கரைத்து பிதிர்க்கடனைச் செலுத்தலாம். ம்..சொல்ல விட்டுப் போச்சே..எரிக்கிறதை skype ல அங்கே இருந்தே பிள்ளைகள் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்வார்களாம்...அதற்குத் தனிக்கட்டணம்'. அங்கே இருந்த ஆறு பெரும் 60ஐக் கடந்தவர்கள். அனைவரும் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தோம். அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே தோன்றாமல் கவனத்தைத் திருப்பி ' இங்கே என்ன கேபிள் டிவி யா..இல்லை dish ஆ என்று பேச்சை மடை மாற்றினேன்.
'சரி.. சரி ..சாப்பிடப் போவோம்..இல்லேன்னா கூட்டம் வந்திடும் என்றார். கீழே இறங்கி இரண்டு பிளாக் தாண்டி நடந்து போய் சாப்பாட்டு அறையை அடைந்தோம். எங்கு பார்த்தாலும் walker ..walking stick , சக்கர நாற்காலியும் தள்ளுனரும்..எல்லோரிடமும் அழைத்துப் போய் அவரும் அவர் மனைவியும் 'எங்க friends ..எங்களைப் பார்க்க வந்திருக்காங்க. எங்களோடு சாப்பிட்டு evening தான் போவாங்க' என்று அறிமுகப் படுத்தினர். அதிலேயே சீக்கிரமாப் போகணுமுன்னு கிளம்பிடாதேடா பாவி என்ற குறிப்பும் இருக்கக் கண்டேன்.
அறிமுகப் படுத்தப் பட்ட அத்தனை பேரும் ஒருமித்துக் கேட்ட கேள்வி 'உங்க பிள்ளைகள் எந்த நாட்டிலே இருக்காங்க..?' 'எங்க கூடத்தான் இருக்காங்க ' என்ற எங்கள் பதிலைக் கேட்டு அவர்கள் சொன்ன 'நல்லவேளை..பரவாயில்லை.' என்ற குறிப்புக்களில் இருந்தது மகிழ்ச்சியில்ல..ஆற்றாமைதான் என்பது நன்றாகவே புரிந்தது.
வீடு திரும்பும் போது காரில் உடன் வந்த அடுத்த வீட்டு நண்பரும் அவரது துணைவியாரும் எனது துணைவியாரும் நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை. நான் பேச்சை இப்படி முடித்து வைத்தேன் ' இப்படியெல்லாம் ஆகுமுன்னு தெரிஞ்சுதான் அந்தக் காலத்திலேயே எங்க அப்பா SSLC க்கு மேலே என்னைப் படிக்க வைக்க முடியாதுன்னு சொன்னார் போல..'
பிள்ளைகளை நல்லாப் படிக்க வைக்கிறது ஒரு தப்பா..?
No comments:
Post a Comment