Monday, September 28, 2015

மதுரை தங்கம் தியேட்டர்.


மதுரை தங்கம் தியேட்டர் 

மலரும் நினைவுகள் 



           சமீபத்தில் மதுரை தங்கம் தியேட்டர் இருந்த இடத்தில் ஒரு பிரபலமான நகை மற்றும் ஜவுளிக்கடை ஆரம்பிக்கப் படப்போவதாக விளம்பரங்கள் வெளிவந்தன.  அவற்றை பார்த்த போது மதுரையில் பிறந்து வளர்ந்த எனக்கு எனது இளமைக்கால நினைவுகள் பெரிதும் நினைவுக்கு வந்தன. 

           இந்தத் திரையரங்குக்கும் எனக்கும் மறக்க முடியாத உறவு ஒன்று உண்டு.  நான் பிறந்தது அக்டோபர், 1951. நடிகர் திலகம் முதன் முதலாக நடித்து வெளிவந்த பராசக்தி திரைப்படம் 1952 ம ஆண்டு இந்தத் திரையரங்கில்தான் வெளியிடப்பட்டது. நான் பிறந்தபின் எனது தாயார் என்னைக் கையில் எடுத்துக் கொண்டு இந்தத் திரைப் படத்தைத் தான் முதன் முதலாகப் பார்த்ததாகச் சொல்லுவார்கள். எனவே, திரைப்பட விநியோக நிறுவனத்தில் பணியாற்றியவரின் மகனாகப் பிறந்த நான் முதன் முதலாக நுழைந்த திரையரங்கம் இதுதான் என்பது தங்கம் திரையரங்கோடு எனக்கிருக்கும் நீங்காத நினைவு.

         இந்தத் திரையரங்கம் ஐம்பத்து இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவில் மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரும் அரங்கம். கார்கள் அதிகம் இலாத அந்தக் காலத்திலேயே மிக அதிக அளவிலான வண்டி நிறுத்துமிடங்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலும் அந்தக் கால பிரபலமான வாகனங்களான சைக்கிள்கள் தான் நிறுத்தப் பட்டன.  சாதாரண கொள்ளளவு கொண்ட  நான்கு திரையரங்குகளை இந்தத் திரையரங்குக்குள் நிறைக்க முடியும்.

        மதுரையின் எல்லாத் திரையரங்குகளும் நிறைந்து  HOUSEFULL  போர்டு போட்டபின்னும் இந்தத் திரையரங்கம் நிரம்பி விடாது.  எனது நண்பர்களோடு நான் படம் பார்க்கச் சென்ற காலத்தில் ஒவ்வொரு திரையரங்காக முயன்று டிக்கெட் கிடைக்கவில்லைஎன்றால், எனது நண்பர்கள் 'டே..வங்கடா.. நம்ம  கடலுக்குப் போவோம்'  என்று இந்தத் திரையரங்குக்குத் தான் அழைத்துப் போவார்கள். நிச்சயமாக ஏமாற்றமளிக்காது. மற்றத் திரையரங்குகளில் நூறு நாள் ஓடுகின்ற படங்கள் இங்கு இருபது நாள் ஓடினாலே அந்த அளவு வசூலை அள்ளிவிடும்.

        இத்தனை பெரிய அரங்கிலும் நூறு நாட்களைத் தாண்டி ஓடிய படங்கள் என்று பராசக்தி, நாடோடி மன்னன்  மற்றும் பணமா பாசமா மூன்று தான் என்று சொல்வார்கள்.

        இந்தத் திரையரங்கை மதுரை சென்ட்ரல் சினிமாவிலிருந்து பிரிந்து வந்த திரு பிச்சை முத்துக் கோனார் அவர்கள் கட்டியதாச் சொல்வார்கள். அவரது வீடு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்  மேற்குக்  கோபுரத்துக்கு  அருகிலிருந்த  கீழ ஹனுமந்தராயன் கோவில் தெருவில் இருந்தது. இது திருமதி M.S.சுப்புலட்சுமி அவர்கள் பிறந்த வீடு இருக்கும் மேல ஹனுமந்த ராயன் கோவில் தெருவுக்கு அடுத்தது. இதை ஒட்டித்தான் தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களின் வீடும் கூட  (சென்ட்ரல் திரையரங்கு பின்புறம்) இருந்தது. திரையரங்கின் அளவைப் பார்க்கும்போது அதன் உரிமையாளரின் வீடு மிக மிகச் சிறியது.  இந்தத் தெருவின் ஒரு கோடியில்தான் எனது தந்தையாரின் திரைப்பட விநியோக அலுவலகமும் இருந்தது.  தினமும் மாலை வேளையில் திரு. பிச்சை முத்துக் கோனார் அவர்கள் நடந்தே தனது திரையரங்கிற்குச் செல்வார்.  இடையில் சிறிது நேரம் நின்று எனது தந்தையாரிடம் உரையாடி விட்டுச் செல்வார். நான்  அங்கு இருக்க நேர்ந்த நேரங்களில் இதை கவனித்து, அவ்வளவு பெரிய திரையரங்கின் உரிமையாளார் எவ்வளவு எளிமையாய் இருக்கிறார் என்று வியந்தது உண்டு. எனக்குத் தெரிந்து அவர் நீண்ட காலம் கார் வாங்கியதில்லை, அவ்வளவு வசதி இருந்தும்கூட.

         1972 ம் ஆண்டுவாக்கில் நான் அரசாங்கப் பணியில் சேர்ந்து வெளியூருக்கு மாறுதலாகிச் சென்றேன். அதன்பின் மதுரைக்குள் வசிக்கின்ற வாய்ப்பு மிகவும் குறைந்து போனது. பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னும் கூட அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனாலும் பிற்காலத்தில் இந்தத் திரையரங்கு வளாகம் புதர் மண்டிக் கிடக்கும் காட்சியைக் காணும் போதெல்லாம் மிகவும் வருத்தமாக இருக்கும். திரு. கோனார் அவர்களுக்குப் பின்னர் இந்தத் திரையரங்கை எடுத்து நடத்தத் திறமுள்ளவர்கள் இல்லாமல் போனது வருத்தமே.  புதர் மண்டிப்போன இந்த இடம் இப்போது மீண்டும் மக்கள் கூடும் இடமாக உருவாகியிருப்பது நினைக்க ஒருவகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

        இந்தத் திரையரங்கம் தவிர அன்று பிரபலமாக இருந்த தேவி டாக்கீஸ், சந்திரா டாக்கீஸ், சிடி சினிமா போன்றவையும் கூட இன்று களையிழந்து போயின என்று அறிவது வேதனையாகத்தான் இருக்கிறது. 

       

        





No comments:

Post a Comment