சென்னைக்கு அருகிலுள்ள பல பிரசித்தமான, தொன்மையான ஆலயங்களுள் சித்தர்காடு அல்லது சித்துக்காடு என்று அழைக்கப்படும் சிற்றூரில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசூன குந்தளாம்பிகை சமேத ஸ்ரீ தாத்திரீஸ்வரர் கோவில் என்னும் சிவன் கோவிலும்,ஸ்ரீ சுந்தரவல்லி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் என்னும் பெருமாள் கோவிலும் முக்கியமானவை.
இந்த ஊர் பூவிருந்த வல்லியிளிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பேருந்தில் செல்ல விரும்பினால் பூவிருந்தவல்லியிலிருந்து 54C என்ற தண்டரை செல்லும் பேருந்தில் சென்று சித்துக்காடு நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரைகிலோமீட்டர் நடந்து சென்று முதலில் சிவன் கோவிலையும், அடுத்து பெருமாள் கோவிலையும் சேவிக்கலாம். பேருந்துகள் அடிக்கடி இந்த வழியில் இல்லையென்று தெரிவித்தார்கள். அதனால் இருசக்கர வாகனம் அல்லது காரில் செல்லுவது மிகவும் வசதியானது.
பூவிருந்தவல்லியிலிருந்து வருபவர்கள் பெங்களூர் சாலையில் நசரத் பேட்டையில் இருந்து யு டர்ன் எடுத்து வண்டலூர்-வாலாஜா வெளிவட்டச் சாலையின் வழியாகச் செல்வது மிகவும் வசதி. இந்தச் சந்திப்பிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் வெளிவட்டச் சாலையில் சென்று நெமிலிச் சேரிக்குச் சுமார் ஐந்து கிலோமீட்டர் முன்பாக 'திருமணம்' என்ற ஊருக்குச் செல்லும் கைகாட்டி இருக்குமிடத்தில் வெளிவட்டச் சாலையிலிருந்து பக்கச் சாலையில் இறங்கி சிறிது தூரம் சென்றால் சித்துக்காடு என்ற அறிவிப்புப் பலகையைக் காணலாம். அந்த வழியே சிறிது தூரம் சென்று இடப்புறம் திரும்பினால் செவன் கோவில் கோபுரம் கண்ணில் படும். அதைத்தண்டிச் சென்று அதை ஒட்டியுள்ள குளத்தை வளம் வந்தால் கருடாழ்வாருக்கு ஓர் சிறிய சந்நிதியும் அதன் எதிரே ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் சந்நிதி கோபுரமும் தெரியும். இந்தக் கோவில் காலை சுமார் பத்து மணிக்கே மூடி விடுவார்கள் ஆதலால், முதலில் இங்கு தரிசனம் முடித்து விடுவது நல்லது.
இங்கு ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் சந்நிதியும், சுந்தரவல்லித் தாயார் சந்நிதியும் தரிசித்துக்கொண்டு ஆண்டாள் சந்நிதிக்குச் சென்றால் அந்தச் சந்நிதி மண்டபத்தின் ஒரு தூணில் கருடக்கொடி சித்தர் உருவம் செதுக்கப் பட்டுள்ளது. இந்த சித்தருக்குப் பலரும் அபிஷேகம் விசேஷ பூஜைகள் என்று செய்வதுண்டு.
கோவிலுக்கு எதிரிலுள்ள கருடன் சந்நிதியையே சிலர் சித்தரின்
ஜீவ சமாதி என்று குறிப்பிட்டனர். சிவன் வாகனமான நந்திஎம்பெருமானைமுதல் சித்தர் என்று குறிப்பிடுவதைப் போல விஷ்ணுவின் வாகனாமானகருடனையும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர் போலும்.
பெருமாள் கோவில் தரிசனம் முடிந்து தெப்பக் குளத்தை ஒட்டி முன்புறமாக வந்தால், ஸ்ரீ தாதிரீஸ்வரர் கோவிலுக்கு வரலாம். ஸ்ரீ தாத்திரீஸ்வரர் சந்நிதியில் நின்றால் அம்மையையும் அப்பனையும் ஒரு சேரத் தரிசிக்கலாம். சந்நிதியை வலமாக வந்தால் விநாயகர் சந்நிதியைக் கடந்து ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி-தேவசேனையுடன் தரிசனம்; அருகிலேயே லக்ஷ்மி, சரஸ்வதி, கன்னியம்மன் சந்நிதி, அதை அடுத்து ஆதி சங்கரருக்குத் தனிச் சந்நிதி. இம்மூன்று சந்நிதிகளும் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் வழக்கமான சிற்பங்களுடன் பல சித்தர்களின் உருவங்களும் செதுக்கப் பட்டுள்ளன. அவற்றுக்கு பௌர்ணமி தினங்களில் சிறப்பு வழிபாடு உண்டு என்று தெரிவித்தனர்.
இரண்டு கோவில்களுக்கும் பொதுவாக உள்ள தெப்பக் குளத்தினுள் பல சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்ததாகவும் சொல்லுகின்றனர். இந்த இடம் பழங்காலத்தில் அடர்ந்த காடாக இருந்ததாகவும் அந்தக் காட்டில் பல சித்தர்கள் வாழ்ந்ததாகவும் சொல்வதுண்டு.
பெரிய கோவில்கள்; ஆனால் பெரிதும் ஆள் நடமாட்டமின்றியே உள்ளன. பூஜைக்குரிய பூ, பழம் முதலியன விற்கும் கடைகள் கூட அருகில் இல்லை. பெரும்பாலும் காலை பத்து மணியிலிருந்து பதினோரு மணிக்குள் இரண்டு கோவில்களும் நடை சாத்தப் படுகின்றன.
எனவே இங்கு வழிபட விரும்புகிறவர்கள் காலை 9-9.30 மணிக்குள்ளகவோ அல்லது மாலை 5 மணிக்கு மேலாகவோ செல்வது நல்லது. பூஜைக்குரிய பொருட்கள் பூவிருந்தவல்லி கோவில் அருகிலேயே வாங்கிச் செல்லவும். அமைதியான கிராமத்தினிடையே அதனினும் அமைதியான சூழலில் அமைந்த கோவில்கள். தியானம் செய்ய அமைதியைத் தேடுபவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்கள்.
No comments:
Post a Comment