Thursday, August 18, 2016

சென்னையை அடுத்துள்ள நவக்கிரஹ கோவில்கள்- ஒரு திருவுலா.

     சாதரணமாகவே பணி ஓய்வுக்குப்பின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னையை சுற்றியுள்ள திருக்கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  தற்போது குடும்பச் சூழ்நிலையின் காரணமாக சென்னையை விட்டு கோவைக்குக் குடி பெயர்வதென்று ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் சென்னையின் போக்குவரத்து நெருக்கடிகளும், வெப்பமான சூழ்நிலையும், வியர்வையும் கசகசப்பும் நான் பதவி உயர்வு பெற்று 2002ல் சென்னைக்கு வந்ததிலிருந்து இந்த நகரத்தின் மீது இனம் காணாச் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. பணி ஓய்வுக்குப்பின் ஊரை விட்டு ஓடி விட வேண்டும் என்றுதான் நினைத்தேன்.

    ஆனால் பணிக் காலத்திலேயே, மாலையில் அலுவலகத்தை விட்டுக் கிளம்பியபின், வீட்டிற்கு வரும் வழியில் பாரி முனையிலும், திருவல்லிக்கேணியிலும், மயிலையிலும் உள்ள கோவில்கள், மடங்கள் ஆகியவற்றுக்குச் சென்று வருவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன். இந்த நகரத்தில் இத்தனை கலாச்சார நிகழ்வுகளுக்கும், அவரவர் மத, மன நிலைகளுக்கேற்ற வழிபாட்டுத் தலங்களும்  உள்ளன என்பது பிரமிப்பைக் கொடுத்தது.

     ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பித்த காலத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோவில், பாரிமுனையில் இன்றுள்ள காளிகாம்பாள் கோவில், சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவர் கோவில் ஆகியவை தங்கள் உண்மையான இருப்பிடத்தைவிட்டு ஆங்கிலேயரின் கோவில்களுக்கும், கோட்டைகளுக்கும் இடம் கொடுத்து, தாங்கள் இடம் பெயர நேர்ந்தது என்பதையும் , அவற்றை ஆங்கிலேயரிடம் துபாஷிகளாகப் பணியாற்றிய தமிழ்ப் பெருங்குடி மக்களே தங்கள் முயற்சியிலும், பொருட்செலவிலும் மாற்று இடங்கள் பெற்றுக் கட்டி முடித்தனர் என்பதும் ஓரிரு வரலாற்றுக் குறிப்புக்களில் காண முடிந்தது. இடம்பெயர்ந்தாலும், தங்கள் அருட்பெருக்கையும், பக்தர்களின் கூட்டத்தையும் இந்தக் கோவில்கள் இழந்து விடவில்லை என்பதும் விந்தை.

    2008ல் ஓய்வு பெற்றபின், சென்னையைச் சுற்றி சற்றுத் தொலைவிலுள்ள கோவில்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தேன். என் சுற்றுப்புறத்தில்  உள்ளவர்களுக்கு அவ்வளவாக இத்தகைய நாட்டமில்லாததால்,  கோவில்களின் இருப்பிடங்களை அறிவதில் சிரமப்பட்டேன். அவ்வாறு ஒரு முறை திருவாலங்காடு திருத்தலத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த புத்தகக் கடையில் 'திருக்கோவில்கள் 234' என்ற நூல் ஒன்று கண்ணில் பட்டது. இதனை 'ஆலயப் பிரியர்' சிவ. சுந்தரம் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.  இதனை வாங்கி வந்து படித்துப் பார்த்து பிரமித்துப் போனேன். தொண்டைமண்டலம் என்று அழைக்கப் படுகின்ற இன்றைய சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சி,திருவண்ணாமலை, வேலூர்  பகுதிகளில் உள்ள அத்தனை கோவில்களைப் பற்றியும், அவற்றுக்குப் புகைவண்டி, பேருந்து வாயிலாகச் செல்லும் வழிகளைப் பற்றியும், கோவில் வரலாறு பற்றிய சிறு குறிப்புமாக, மிக அரிய கையேடாக இந்நூல் இருந்தது.

   இதனைப் படித்தபின்தான் இத்தனை திருத்தலங்கள் சென்னைக்குள்ளேயே இருக்கின்றன என்பது புரிந்தது.  இதனைக் குறியீடாகக் கொண்டு ஒவ்வொரு கோவிலாக எனது இரு சக்கர வாகனத்திலும், பேருந்து மூலமாகவும், வாய்ப்புக் கிடைத்தபோது காரிலுமாக சென்று வந்தேன். இதுபோல தமிழகத்தின்இ பிற மாவட்டங்களிலுள்ள ஆலயங்களைப் பற்றி இந்த ஆசிரியர் எழுதிய நூல்கள் இருக்குமானால் மகிழ்வடைவேன். தற்போது  சென்னையை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறவேண்டிய நிலை வந்தபோது பார்க்காத கோவில்களைப் பற்றிய ஏக்கம் எழுகின்றது.

    இந்த வரிசையில், ஏற்கனவே பார்த்திருந்தாலும், போரூரைச் சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்கள் அனைத்தயும் ஒரே நாளில் தரிசித்துவிடுவது என்று முடிவு செய்தேன். அதிசயமாக எனது துணைவியாரும் உடன் வருவேன் என்று கிளம்பினார்கள். 17/08/2016, புதன்கிழமை ஆவணி மாதப் பிறப்பன்று செல்வது என்று தீர்மானித்தேன். சோமங்கலம் போன்ற சில கோவில்கள் காலை பத்தரை மணிக்கெல்லாம் நடை சாத்தி விடுவார்கள் என்பதால் காலை ஆறு மணிக்கெல்லாம் அய்யப்பந்தாங்காலில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.

    முதலில் பூவிருந்தவல்லி வைத்தியநாத சுவாமி கோவில். (அம்மன் தையல்நாயகி). இது செவ்வாய் (அங்காரகன்) தலம். ஆறு மணிக்கு அபிஷேகத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த அர்ச்சகர், தனியே நின்று கொண்டிருந்த எங்களைப் பார்த்ததும் தீபாராதனை செய்து கொடுத்தார். இன்றைய திருக்கோவில் உலா சிறப்பாக நடைபெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிரகாரம் வலம் வந்து கிளம்பினோம். மீண்டும் குமணன் சாவடி வந்துதான் மாங்காடு செல்ல வேண்டுமென்று நினைத்த எனக்கு அங்கிருந்த பூக்கடை மூதாட்டி, கோவிலை ஒட்டியே செல்லும் ஒரு சாலை நேராக மாங்காடு இட்டுச் செலும் என்று வழி காட்டி உதவினார். அந்த வழியே சென்று சுமார் ஐந்து கிலோமீட்டரில் அந்தப் பாதை நேரடியாக வெள்ளீஸ்வரர் கோவிலில் சேர்த்தது.



   மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலும், வெள்ளீஸ்வரர் கோவிலும் நான் சென்னைக்கு குடிவந்ததில் இருந்து எனது இஷ்ட தெய்வம்.  எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சென்று வருகின்ற தாய் வீடு.  கண்ணையும் மனதையும் நிறைக்கின்ற பெரிய சிவலிங்கம் இன்றும் என் உள்ளம் கவர்ந்து நின்றது. அர்ச்சகர் மிகவும் பழக்கமானவர் ஆனதால் எங்களைப் பார்த்ததும், 'வெளியூருக்குப் போறதாச் சொன்னீங்களே; காமாட்சி இன்னும் வழியனுப்பலையா?' என்று சிரித்துக் கொண்டே கேட்டார். ஊர்ப்பெயர்ச்சி தள்ளிக் கொண்டே போவதற்கு இதுதான் காரணமோ?

   சுவாமியின் பெயரே குறிப்பிடுவது போல இது வெள்ளியின் தலம்.. ஆம், சுக்கிரத்தலம். கடைகளும் குடிசைகளும் ஆக்கிரமித்திருந்த  இடங்களை  போன டிசம்பர் வெள்ளத்தின் போது மீட்டு, வேலிஇட்டு, சுக்கிரதீர்த்தம் என்று பெயரிட்டுள்ளனர்.

    இக்கோயிலில் சுவாமி மட்டும்தான்; அம்பாள் சன்னதி தனியாக இல்லை; மாங்காடு காமாட்சிதான் தனியாகக் கோவில் கொண்டு தவமியற்றிக் கொண்டிருக்கிறாளே? சுவாமிக்கு வணக்கம் செய்து அம்பாளைக் காணப் புறப்பட்டோம்.


   அக்கினிக்கு நடுவே ஒற்றைக் காலிலே நின்று உக்கிர தவம் செய்யும் காமாட்சி; அவளின் உக்கிரத்தை அடக்க ஸ்ரீ சங்கரர் தாபித்த மகாமேருவே இங்கு வரங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் தேவியின் சொருபம். அருகில் சென்றாலே உடலைச் சிலிர்க்க வைக்கும் துடிப்பை உணர முடியும். இந்தக் காமாட்சியம்மனின் மகாமேரு சந்நிதியிலும், வெள்ளீஸ்வரரின் சந்நிதியிலும்தான் கருவறைக்கு மிக அருகில் சென்று தரிசிக்க முடியும். வேறு எந்த கோவிலிலும் மூலஸ்தானத்துக்கு இவ்வளவு அருகில் செல்ல அனுமதியில்லை.   வணங்கி விடைபெற்று அடுத்த கோவிலுக்குக் கிளம்பினோம்.

     மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலை வழியாக வந்து தேரடியில் வலப்புறமாகத் திரும்பி சென்றால் சற்றுத் தொலைவில் நாகேஸ்வர சுவாமி கோவில். குன்றத்தூரில் பிறந்து சோழ மன்னன் அனபாயனிடம் அமைச்சராகப் பணியாற்றியவரும், அந்த மன்னன் வேண்ட, அறுபத்து மூவர் வரலாற்றை சுந்தரரின் திருத்தொண்டத் தொகையைக் குறிப்பாகக் கொண்டு 'பெரிய புராணம்' என்னும் சைவத் திரு நூலாக இயற்றியவருமான சேக்கிழார் கட்டிய கோவில். சேக்கிழார் சோழ மன்னனிடம் அமைச்சராக இருந்த போது திரு நாகேஸ்வரம் கோவிலில் உள்ள இறைவனிடம் மாறாக் காதல் கொண்டு, அதன் நினைவாக அவரது ஊரில் கட்டிய கோவில் இது என்று சொல்வர். இறைவர், நாகேஸ்வரர், அன்னையின் நாமம் காமாட்சியே தான். நாகேஸ்வரர் என்ற பெயர் கொண்டதால் நாக வடிவான ராகுவுக்குச் சிறப்புச் சேர்க்கும் கோவில். வணங்கி வெளிவந்து, குன்றதூரிலிருந்து  ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் எட்டு கிலோமீட்டர் வந்து, சோமங்கலம் சாலைக்கு இடது புறமாகத் திரும்பிப் பயணித்தால் சோமங்கலம் கோவிலை அடையலாம்.

    சென்ற முறை நான் தனியே வந்தபோது காலை 10.30 மணிக்கெல்லாம் வெளிக்கதவைப் பூட்டிக்கொண்டு அர்ச்சகர் கிளம்பத் தொடங்கியிருந்தார். வெகு தொலைவிலிருந்து வருகிறேன் என்று வேண்டிக் கேட்டபின் வெளிக்கதவைத் திறந்து உள்ளே செல்ல அரைமனதாக அனுமதித்தார். பூட்டிய கம்பிக் கதவினூடேதான் தரிசிக்க முடிந்தது. காலையிலே  சீக்கிரமாகவே திறந்து விடுவதாலும் பெரும்பாலும் பக்தர்கூட்டம் அதிகமில்லாததாலும் விரைவிலேயே நடை சாத்தி விடுவதாக அப்போது இருந்த அர்ச்சகர் சொன்னார்.

    இந்த முறை முன்னெச்சரிக்கையாக எட்டரை மணிக்கெல்லாம் கோவில் சென்று சேர்ந்து விட்டோம். ஸ்ரீபெரும்புதூர் சாலையிலிருந்து சோமங்கலம் சாலையில் திரும்பியதிலிருந்து இருபுறமும் பசுமையான காடுகள் நிரம்பிய இருபதடிச் சாலை, வறண்ட தார் ரோடுகளுக்குப் பழகிப்போன கண்களைக் குளிர்வித்தது.  சென்னையைச் சுற்றி இப்படிக் கோவில்களைத் தேடி அலையும் போதுதான் இன்னும் உயிரோடு இருக்கும் கிராமங்களைக் காண முடிகின்றது.

   இது போன்ற அமைதியான பாதைகள் வழியாகச் செல்ல நேரும்போது எல்லாம் என் 'எஜமானியம்மா' கேட்கிற வழக்கமான கேள்வியை இன்றும் கேட்டார். ' இங்கேயெல்லாம் ஏக்கர் என்ன விலையிருக்கும்? பேசாம இங்கே வந்திரலாமா?'  அடுத்த மாசம் பென்ஷன் வந்தாத் தான் செலவுக்கு வழியென்று தெரிந்தும் காட்சிகளின் இனிமை அறிவைத் தாண்டி மனதைத் தூண்டுகிறது என்பது எனக்கும் தெரியும்தானே..'இங்கேயெல்லாம்  கேபிள்  TV இல்லையாம்..சீரியல் பாக்க முடியாது' என்றேன். 'அந்த வீட்டிலே நிறுத்துங்க நானே கேட்டுக்கிறேன்..கோவிலில்லாத ஊர்கூட  இருக்கலாம்..கேபிள் இல்லாதா ஊரா?' என்றாள். நான் ஏன் வண்டியை நிறுத்துறேன்.

    கோவில்தரிசனத்தில் பாதையின் வசந்தம் பாதையை மாற்றிவிட்டது. சிறிய கோவிலானாலும்  சிறப்பாகப் பராமரிக்கப் பட்டுள்ளது. இந்த முறை இருந்த அர்ச்சகர் அபிஷேகம் முடிந்து தீபாராதனைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். கோவிலருகில் கடைகள் இருக்கும் என்று  பூசைப் பொருட்கள் வாங்காமல் வெறும் கையாய் வந்தது தவறு என்று உணர்ந்தேன்.  மீண்டும் ஊருக்குள் போய் ஏதேனும் வாங்கி வரலாம் என்று புறப்பட்ட என்னைத் தடுத்த அர்ச்சகர் 'அடுத்த முறை மறக்காம வாங்கி வாங்க..இப்போ இருக்கிறதை வைத்தே பூஜையை முடிச்சுடறேன் என்றார்'. இது எனக்கு 'அடுத்த முறைதான்' இருந்தும் இப்படித்தான் வந்திருக்கிறேன் என்பது இப்போதுதான் உரைத்தது.  இங்குள்ள சுவாமி சோமனாதீச்வர், அம்பாள் காமாட்சி அம்மன். சுவாமி சன்னதி தரிசனம் முடிந்து வந்ததும் அழகான பாலசுப்ரமணியர் தரிசனம் பிரகாரம் வலம் வந்து அம்மன் சன்னதியிலும், இக்கோயிலுக்குரிய கிரகமான சந்திரன் சன்னதியிலும் வணங்கினோம்.  ஆள் அரவம் இல்லாதவாறு ஊரை விட்டு ஒதுங்கி இருக்கிற கோவில். அதனால் தடுப்பு கதவு இருந்தும் கூட ஆங்காங்கே படுத்துக் கிடக்கின்ற பைரவர் வாகனங்கள்.

    தரிசனம் முடித்து மீண்டும் வந்த பாதையிலே குன்றத்தூர் நோக்கிப் பயணம். இப்போது காலை மணி ஒன்பதை நெருங்கி இருந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்குச்  செல்கின்ற மினி பஸ்களும்..அலுவலகம் செல்கின்றவர்களின் இரு சக்கர வாகனங்களுமாய்  ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் பாதை நிரம்பி வழிந்தது. வரும்போது இருபது நிமிடத்தில் கடந்த பாதையை இப்போது கடக்க நாற்பது நிமிடம் ஆனது. குன்றத்தூர் வந்து போரூர் செல்லும் வழித்தடத்தில் திரும்பி கோவூர் நோக்கிப் பயணம்.



     இந்தப் பாதையும் பள்ளிகள், கல்லூரிகள்,அலுவலகங்கள் செல்லும் முக்கியப் பாதை ஆனதால் இங்கும் சென்னை நகரத்திற்கே இயல்பான வாகன நெருக்கடி. இதை எதிர்பார்த்தே காரை ஓரம் கட்டிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்தேன்.  இடையிடையே புகுந்து ஒருவழியாய் கோவூரில் இடப்புறமாய் திரும்பி கோவில் வாசலை அடைந்தோம்.

   கோவிலின் இருபுறமும் பாழடைந்து கிடந்த நீண்ட கட்டடங்கள் அன்றைய நாளில் இத்திருக்கோவிலுக்கு வருகின்ற அடியார்கள் தங்குவதற்காக அமைக்கப் பட்டிருந்த சத்திரங்களாக இருக்க வேண்டும். இவ்வளவு பேர் வந்திருப்பார்கள் என்பதும், அவர்களுக்கெல்லாம் உணவும் உறைவிடமும் தரப் பட்டன என்பதும், இக்கோவில் அன்று எவ்வளவு சிறப்புப் பெற்றிருந்தது என்பதற்குச் சான்று. குன்றத்தூரில் சேக்கிழார் வாழ்ந்தது போல, இந்தக் கோவூரும், கோவூர் கிழார் என்ற சங்கப் புலவரின் பெயரோடு புகழ் பெற்றிருக்கிறது. அவ்வையார், அதியமான், சோழன் நெடுங்கிள்ளி போன்றோரின் காலத்தில் இவரின் பெயரும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கிறது. தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்று இதனால் தான் அவ்வையார் பாடினார் போலும்.

   இக்கோவிலின் இறைவர் சுந்தரேஸ்வரர்.  மதுரை சுந்தரேஸ்வரர் கோவில் புதன் கிரகத்திற்கான சிறப்பான கோவில் என்பது போல புதன் தலமான இந்தக் கோவில் ஈஸ்வரனும் சுந்தரேஸ்வரர் ஆகத்தான் இருக்கிறார். அம்பாள் சுந்தரேஸ்வரருக்கேற்ற சுந்தராம்பிகை.  முன்புற கிழக்கு வாயில் பூட்டப் பட்டிருப்பதால், வடக்கு வாயில் வழி நுழைந்து  எதிரிலிருக்கும் விநாயகரை வணங்கி வலமாகச் சென்று சந்நிதியில் நுழைந்தால் சுவாமியையும், அம்மனையும் ஒரு சேரத் தரிசிக்கலாம்.  தரிசனம் முடித்து பிரகாரத்தில் இருக்கும் தேவதைகளை வணங்கி புறப்பாட்டோம்.

     மிகவும் பொறுமையாக வந்த என் இல்லத்தரசி மெல்ல கேட்டகேள்வி ...அடுத்து எந்த கோவில் என்பதல்ல; அடுத்து எங்கே நல்ல ஹோட்டல் இருக்கு என்பதுதான். ஆம், சர்க்கரை என்ற பொருள் என் இரத்தத்தில் அதிகம் இருக்கிறது என்பது தற்போதுதான் கண்டுபிடிக்கப் பட்டதால் நான் பட்டினி கிடக்கக் கூடாதென்பதை சுட்டிக் காட்டினார்.

   மீண்டும் குன்றத்தூர்-போரூர் சாலைக்கு வந்து போரூர் நோக்கிச் சென்று கெருகம்பாக்கம் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே வலப்புறம் திரும்பி நீல்கிரிஸ் தாண்டி  இடப்புறம் செல்லும் சாலையில் திரும்பினால் நீலகண்டேஸ்வரர் கோவில்.



     கோவில் உள்ளே சென்றதும் இடப்புறம் கேது பகவானுக்கான நாகர் சந்நிதி. இதைப் பிறகு தரிசிக்கலாம். முதலில் நேரே தெரிவது ஆதி காமாட்சியம்மன் சந்நிதி. அந்தச் சன்னதிக்கு இடப்புறம் நீலகண்டேஸ்வரர்.  நின்ற இடத்திலேயே சுவாமியையும் அம்மனையும் ஒரு சேரத் தரிசித்துக் கொள்ளலாம்.  வெளியே வந்து நாகர் சந்நிதியை (கேது) வணங்கி பிரகாரம் வலம் வந்து வெளியே வந்தோம். மிகச் சிறிய கோவில்.  மணி காலை பத்தரை; நல்ல பசி.

    கோவிலை விட்டு வந்து கொளப்பாக்கம் சாலையில் திரும்பியதும்...அப்பாடி..அடையாறு ஆனந்த பவன்.. பசியும் தாகமும் தீர்ந்தன. அடுத்து நேரே கொளப்பாக்கம் செல்லும சாலையில் சென்று ஒரு திருப்பத்தில் அம்பேத்கார் சிலையை ஒட்டி இடப்புறமாய்செ ல்லும் சிறிய காங்கிரீட் சாலையில் சென்று மீண்டும் வலப்புறம் திரும்பினால்.. ஏகாந்தமாய்..அகஸ்தீஸ்வரர் கோவில்.


  மாநகரத்தின் நடுவே இருந்தாலும், அருகிலுள்ள சாலைகளில் வாகனப் போக்குவரத்து மிகுந்திருந்தாலும், அதன் நடுவே பரந்துபட்ட இடமும், நிழல்தரும் மரங்களும், (நீரில்லாத) திருக்குளமுமாய் ஒரு கோவில். மரத்தடி மேடையில் தாராளமாய் அமர்ந்து தியானமே செய்யலாம் போலிருந்த சூழல்.

    உள் நுழைந்ததும் நேர் எதிரே உயரிய மேடை மீது சந்நிதி கொண்டிருக்கும் அகத்தீஸ்வரரும் ஆனந்த வல்லியும். சிறிய சந்நிதி; நிமிர்ந்து நின்றால் தலை இடிக்குமோ என்னும் அளவுக்கு தாழ்வான கூரை.  தீபாராதனை பார்த்து கீழிறங்கி வந்து இடப்புறமாய் சென்றால் வரிசையாக காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை. நாங்கள் சென்றது புதன் கிழமை ஆதலால் விஷ்ணுவுக்கு ஒரு குடும்பத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை நடத்திக் கொண்டிருந்தனர். பின்னும் பிரகாரம் வலம் வந்தால் பெரிதான கால பைரவர் சந்நிதி, அதை அடுத்து சூரியனாருக்கு ஓர் சந்நிதி. இந்தக் கோவில் நவ கிரகங்களில் சூரியனுக்கான சிறப்பு கோவில். கோவிலை விட்டு வெளிவந்த பின்னும் பரபரப்பு தொற்றிக்கொள்ளாத அமைதியான சூழல் இன்னும் சிறிது நேரம் அங்கே நிற்கலாம் போல் தோன்றியது.

    அடுத்தது ஒரு VIP க்கான கோவில் ஆச்சே. தாமதம் பண்ணினால் தண்டனை கிடைக்குமோ என்று வண்டியைத் திருப்பிக்கொண்டு கொளப்பாக்கம்-கெருகம்பாக்கம் சாலையில் திரும்பினோம்; சனீஸ்வரனுக்கு சிறப்பான பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் கோவிலை நோக்கி.



   கொளப்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிரே செல்லும் ஒமேகா பள்ளி சாலையில் சுமார் ஐந்தாறு கிலோமீட்டர் கரடு முரடான சாலையில் சென்று ஓர் ஆற்றைக் கடந்து (அடையாறு??) வலப்புறம் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் சென்றால் பொழிச்சலூர் ஊருக்கு நடுவே அகஸ்தீஸ்வரர் கோவில். சனிஸ்வரனுக்குச் சிறப்பான கோவில் என்பதால் பரிகாரப் பூஜைக்கான பொருட்களை விற்பதற்கான கடைகள் நிறைய இருந்தன. இதற்கு முன் ஒருமுறை ஒரு சனிக்கிழமையன்று சென்று கூட்டத்தில் மாட்டிக் கொண்டேன்.  மிக நீண்ட வரிசை. நல்லவரைக் காட்டிலும், தண்டிப்பவர் என்று நாம் நம்புபவருக்குத் தானே அதிகம் பயப்படுவோம். அனால் நேற்று புதன் கிழமை என்பதால் அதிகக் கூட்டமில்லை.

    உள்ளே நுழைந்து வலமாக வந்து சந்நிதிக்குள் தெற்குமுகமாக  நுழைந்தால் முதலில் அகத்தீஸ்வரர் சந்நிதி, தரிசனம் முடித்து வந்து ஆனந்த்வல்லியை தரிசித்து வந்தால், அருகிலேயே சனிஸ்வரனுக்கான சந்நிதி. எல்லோரையும்போல பயபக்தியுடன் வணங்கி (எனக்கு இப்போது ஏழரை) வெளிவந்து பிரகாரம் வலம் வந்தால் நுழைவு வாயில் அருகிலேயே கால பைரவருக்கான தனி சந்நிதி. சந்நிதிக்கு உள்ளேயே அவர் வாகனமான நாய் ஒன்று படுத்திருந்தது. தேய்பிறை  அட்டமியன்று இவருக்குச் சிறப்புப் பூஜைகள் உண்டென்று சொன்னார்கள்.

    பூவிருந்தவல்லியில் தொடங்கிய நவக்கிரக சந்நிதி வலம் போரூர் ராமனாதீஸ்வரர் கோவிலோடு நிறைவு பெற வேண்டும். இதற்காக பொழிச்சலூரிலிருந்து மீண்டும் கொளப்பாக்கம் நோக்கி பயணம் தொடங்கினோம். கொளப்பாக்கம் வந்து, கெருகம்பாக்கம் தாண்டி குன்றத்தூர்-போரூர் சாலையைப் பிடித்து  போரூர் power house அருகில் வலப்புறம் திரும்பி சிறிது தொலைவில் போரூர் ராமனாதீஸ்வரர் கோவில்.


    இந்தக் கோவிலுக்குச் செல்லும் சாலை வெகு காலமாகவே வண்டிகள் ஓட்டத் தகுதியற்ற நிலையிலேயே இருந்து வருகிறது. இதற்கு நேர் மாறாக கோவில் சிறப்பாகப் பராமரிக்கப் படுகிறது. ராஜகோபுரத்தின் உள்நுழைந்து கொடிமரமும் நந்தியையும் தொழுது உள் நுழைந்தால், பெரிதான சுயம்புலிங்கம். ஸ்ரீ ராமர் இலங்கைக்குச் செல்லும் வழியில் இங்குவந்து இந்த ஈஸ்வரரை குருவாக வழிபட்டதால் இது குருவுக்குச் (வியாழ பகவான்) சிறப்புச் செய்யும் தலம் என்று போற்றப் படுகிறது. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி சிறப்பு வழிபாடுகளோடு வீற்றிருக்கிறார். ஸ்ரீ ராமரே இங்கே குருவாக வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ ராமர் இங்கு வழிபட்டதால், வேறெந்த சிவன் கோவிலிலும் இல்லாத விதமாக இங்கு தீர்த்தம் வழங்கி சடாரி சார்த்தப் படுகிறது.  அம்பிகை சிவகாமசுந்தரி.  பிரகாரம் வலம் வந்தால் சுப்பிரமணியர் சந்நிதி கால பைரவர் சந்நிதி அம்மன் சந்நிதி, நக்கிரக சந்நிதிகள் வணங்கி, மீண்டும் கொடிமரத்தடியில் வணங்கி வெளிவரலாம்.

     இவ்வாறாக காலை ஆறுமணிக்கு ஆரம்பித்த நவக்கிரக உலா மதியம் சுமார் 12 மணியவில் நிறைவடைந்தது.  இந்த நீண்ட பயணம்அ லுப்பைத் தருவதற்குப் பதில் இது  போல அடுத்து எங்கு செல்லலாம் என்ற சிந்தனையையே தோற்றுவித்தது.